என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா! ஆசை வார்த்தை கூறி பல லட்சம் மோசடி….
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காளையார் கோவில் தாலுகாவின் மூலக்கரை என்னும் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சென்னை திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த ஜனவரி மாதம் அவருடைய முகநூல் பக்கத்தில் ஐஸ்வர்யா என்ற இளம்பெண் நண்பராக அறிமுகமாகியுள்ளார். பிறகு அந்தப் பெண் தான் டாக்டருக்கு படிப்பதாகவும், பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். செல்போனில் அடிக்கடி கவர்ச்சிகரமாகவும் பேசி வந்துள்ள நிலையில் பல காரணங்களை கூறி கொஞ்சம் கொஞ்சமாக 14 லட்சம் வரை வாங்கியுள்ளார்.
இதற்கிடையே ஐஸ்வர்யா தனக்கு ஒரு தங்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். பாரதிராஜாவும் அதை நம்பி தனது பெரியப்பா மகனான மகேந்திரனை முகநூல் மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஐஸ்வர்யா தான் அண்ணன் தம்பி இருவரிடமும் அக்கா தங்கை போல பேசி கிட்டத்தட்ட 34 லட்சம் வரை ஏமாற்றி உள்ளனர்.
ஆனால் அப்படி ஒரு தங்கையே இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு கடந்த ஒருமாதமாக ஐஸ்வர்யா பாரதிராஜா மற்றும் அவரின் தம்பியின் தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர். ஐஸ்வர்யா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் இந்த புகாரை ஆவடி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையின் போது போலீசார் ஐஸ்வர்யா மற்றும் அவரது பெற்றோர்களை அழைத்து அவர்களைப் பற்றி விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின் போது ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும் 12 வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு சரண்குமார் என்பவருடன் திருமணமாகி ஒரு மகளும் இருப்பது தெரியவந்தது.
ஐஸ்வர்யா தன்னுடைய அக்கா வைத்திருக்கும் ஒரு கடையில் பணியாற்றி வருவதோடு, தற்பொழுது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. இவர் தனது முகநூல் கணக்குகளில் அழகான ஒரு பெண்ணின் படத்தை வைத்து பாரதிராஜா மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரையும் தனது கவர்ச்சியான ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளார்.
ஐஸ்வர்யா மோசடி செய்த பணம் அனைத்தையும் ஆடம்பரமாக செலவு செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று மாலை ஐஸ்வர்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுவரை ஐஸ்வர்யா முகநூல் மூலம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரித்தனர். இவ்வாறு ஒரு பெண் கிட்டத்தட்ட 34 லட்சம் மோசடி செய்த கைது செய்யப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.