தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து-ஆட்டோ ஓட்டுனர் பலி
விழுப்புரம் மாவட்டத்தின் அருகே பானாம்பட்டில் உள்ள உறல்கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல சவாரியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.
அர்ஜுனன் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு சென்று கொண்டிருந்த அதி வேகமான தனியார் பேருந்து ஒன்று அர்ஜுனன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்வாறு தனியார் பேருந்து மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநரான அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதை அறிந்து அவரது உறவினர்கள் சுமார் 200 மேற்பட்டவர்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சிலர் அந்த சாலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை சுக்குநூறாக அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி கடுமையான பதட்டத்துடன் காணப்பட்டது.
ஆட்டோ ஓட்டுனர் அர்ஜுனனின் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுனரை கைது செய்யுமாறு போராட்டம் வலுப்பெற்றது. இதற்கிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் அந்த பகுதியில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தினால் விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவியது. அதிவேகமாக தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.