இருவர் கைது-1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 2 பேர் கைது. புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி, கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ரமேஷ் மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (03.12.2021) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி – மதுரை நெடுஞ்சாலை, அவல்நத்தம் விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவ்வாறு சோதனை செய்ததில், அதில் இருந்த 1) கண்ணன் (29) த/பெ. காமராஜ், சாஸ்திரி நகர், கோவில்பட்டி மற்றும் 2) மோகன்ராஜ் (29), த/பெ. பசுபதி, திருமணஞ்சேரி மயிலாடுதுறை மாவட்டம் ஆகிய 2 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 2 பேரையும் கைது செய்து ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான 790 புகையிலைப் பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் (TATA ACE Mega XL TN 01 BC 7735) பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த எதிரிகளை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
செய்திகள் : மாரி ராஜா, தூத்துக்குடி.