“எனக்கு வயது17, 2 ஆண்டுகளில் 4 திருமணம்!!” தாய் மற்றும் அண்ணன் கைது!!
மஹாராஷ்டிரா அடுத்த அவுரங்கா பாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது தாய் மற்றும் சகோதரன் 4 வது திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, இந்த சிறுமிக்கு மூன்று முறை திருமணம் ஆனநிலையில் 4 வது திருமணம் செய்ய தாய் உட்பட 13 பேர் மீது மஹாராஷ்டிரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து 17 வயது சிறுமி தெரிவிக்கையில், எனக்கு தற்போது 17 வயதாகிறது. கடந்த 2 ஆண்டுகளாக என் தாயும், சகோதரர்களும் சேர்ந்து மூன்று முறை கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த கணவர்களிடம் வாழ பிடிக்காமல் பிரிந்து வந்துவிட்டேன்.இப்போது நான்காவது முறையாக எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையில் புகார் அளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தாய் மற்றும் சகோதரர்களும் தலை மறைவாகியுள்ளனர். தொடர்ந்து, காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கையில், சிறுமிக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. முதல் முறை திருமணம் நடந்த பின், ஒரு மாதத்தில் தாய் வீட்டுக்கு திரும்பிய சிறுமி, கணவன் வீட்டுக்கு செல்ல மறுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியின் விருப்பமின்றி இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அடுத்த சிலநாட்களிலேயே தாய் வீட்டுக்கு திரும்பிய சிறுமிக்கு, மூன்றாவது முறையாக திருமணம் செய்து உள்ளனர். இப்போது ஒரு ஆண்டு கழித்து வீடு திரும்பிய சிறுமி, மூன்றாவது கணவரின் வீட்டுக்குச் செல்ல மறுத்தநிலையில், நான்காவது முறையாக திருமணம் செய்து வைக்க சிறுமியின் தாயும், சகோதரர்களும் முயற்சித்து உள்ளனர்.
இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கவே தொடர்ந்து அடித்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி தோழியின் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் சிறுமியின் தாயும், சகோதரர்களும் மூன்று திருமணத்திலும் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது, சிறுமியின் தாய், சகோதரர்கள், அவரது மூன்று கணவர்கள் உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.