செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு ஓமிக்ரான் பாதிப்பா?

மதுரை: இலங்கை வழியாகச் சிங்கப்பூரில் இருந்து வந்த நபருக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே அவருக்கு ஏற்பட்டது ஓமிக்ரான் கொரோனா பாதிப்பா என்பது குறித்துக் கண்டறிய அவரது மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் துபாயிலிருந்து 151 பயணிகளும், சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு நேற்று 128 பயணிகள் வந்தனர்.

விமானம் மூலம் வந்த பயணிகளிடம் சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் துபாய் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை. இதனால் துபாயில் இருந்து 158 பயணிகள் வந்த நிலையில், அவர்களிடையே ரேண்டம் முறையில் சிலருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக வந்த 128 பயணிகளிடமும் மதுரை விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரி பள்ளம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் வந்த மனைவி மற்றும் மகனுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அதேநேரம் அவர் குடும்பத்தினர் இருவரும் தனிமைப்படுத்தி வைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல மற்ற பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதையடுத்து அனைத்து பயணிகளையும் 15 நாட்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தினர். மேலும் வருவாய்த்துறை, காவல் துறை சார்பில் அவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க அவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து உலகின் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. ஜப்பான், இஸ்ரேல் நாடுகள் வெளிநாட்டினருக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளன. இருந்தாலும் கூட ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன. உலக சுகாதார அமைப்பு இந்த ஓமிக்ரானஅ கொரோனாவை ஆபத்தான கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்த வைரஸ் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button