அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் / மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என மூன்று பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்..
ஆனால், கொரோனா பரவல், சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த வருடம் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இதனிடையே, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.. அதற்கேற்ப கலந்தாய்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வை நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளை கல்வித்துறை முடுக்கிவிட்டது.. கடந்த நவம்பர் மாதமே அறிவிப்பு வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது…
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது இதுதான்: “கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றை உரிய முறையில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதன்படி போதுமான இடமின்றி இயங்கி வரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து செயல்படலாம். எனினும், இட வசதிக்கேற்ப கூடுதல் மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். இது தவிர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.. முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம் தான் புகார் அளிக்க வேண்டும்..
பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பர் இத்தனை நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டு வருகிறது.