செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணியாற்றும் பெண் காவலர் சக காவலர் மற்றும் உயர் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் தற்கொலை செய்துக்கொள்வதாக எஸ்.பி அரவிந்தனுக்கு புகார் அனுப்ப உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய செங்கல்பட்டு எஸ்.பி பெண் காவலரை மீட்டு கவுன்சிலிங்க்குக்கு அனுப்பி உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஒரு பெண் காவலர் எழுதிய கடிதம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர். புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. அரவிந்தனுக்கு அவர் அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில்,” கடந்த ஒரு மாதமாக தான் பணியாற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் மரியாதை இல்லாமல் பேசுகின்றனர். அடிக்கடி தன்னை மாமல்லபுரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு ஓடி டூட்டி போட்டு பணிக்கு அனுப்புகின்றனர். எனது வீட்டில் இருந்து மாமல்லபுரம் காவல் நிலையம் 50 கிலோமீட்டருக்கு மேல் இருப்பதால் என்னால் அந்த காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை.
இதுகுறித்து மாமல்லபுரம் டிஎஸ்பியிடம் புகார் தெரிவித்து நேரில் தனது பிரச்சினையை சொன்னபோது அவரும் அதை ஏற்காமல் மிரட்டும் வகையில் பேசுகிறார், எங்குமே எந்த நடவடிக்கையும் இல்லை. எனது தந்தை மறைந்து 2 மாதம் ஆன நிலையில் எனது தாய் தனியாக இருக்கும் நிலையில் அவரை பாம்புக்கடித்து சிகிச்சையில் உள்ளார். இதற்காக விடுப்பு கேட்டால் விடுப்பு அளித்துவிட்டு ஆப்சென்ட் போடுகின்றனர். எனவே தனக்கு இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை, நான் இந்த உலகை விட்டு பிரிகிறேன். இனியாகிலும் எந்த காவலரையும் துன்புறுத்த வேண்டாம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பளர் அரவிந்தன் உடனடியாக அப்பெண்ணை பாதுகாக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ளவர்களை அழைத்து அந்த பெண் காவலர் எங்கே எனக்கேட்டுள்ளார். ஐயா இதோ அழைத்து பேசச்சொல்கிறேன் என்ற போலீஸார் சம்பந்தப்பட்ட பெண் காவலர் எண்ணுக்கு போன் செய்தபோது அந்த பெண் காவலர் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளது தெரியவந்தது.
உடனடியாக எஸ்.பியை தொடர்புக்கொண்ட போலீஸார் அவர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்த விவரத்தை சொல்ல, உடனடியாக அந்த பெண் காவலரை தேடிப்பிடித்து அவரை என்னுடன் பேச வைக்கவேண்டும், அவருக்கு ஏதாவது நடந்தால் நீங்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என எச்சரித்து போனை வைத்துள்ளார்.
எஸ்.பியின் எச்சரிக்கையால் அதிர்ந்துப்போன போலீஸார் ஆளுக்கொரு பக்கம் அந்த பெண் காவலரை தேட போலீஸாரின் பெரும் தேடல் முயற்சியில் அந்த பெண் கல்பாக்கம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டு உடனடியாக அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். உடனடியாக போனை போட்டு எஸ்.பியிடம் பேச வைத்துள்ளனர். அவர் அழுதுக்கொண்டே நடந்தததைக்கூற அனைத்தும் எனக்குத்தெரியும், எதற்கும் கலங்கக்கூடாது மனதை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீ தற்கொலை செய்வதால் என்ன மாற்றம் வரப்போகிறது, உன் அம்மாவுக்கு யார் துணை என்று ஆறுதல் கூறியுள்ளார்.
நான் உனக்கு மருத்துவ கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன், நாளை காலை எஸ்.பி ஆஃபீசுக்கு நேரில் வந்து பார் உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். உடனடியாக திருகழுக்குன்றம் ஆய்வாளர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டு அந்த பெண் காவலருக்கு மருத்துவ ஒய்வு அளித்துள்ளார்.பின்னர் அவரை அவர்களது வீட்டிற்கு பத்திரமாக அழைத்து சென்று விட்டுள்ளனர். இன்று அந்தப்பெண் காவலர் எஸ்.பி அலுவலகம் வந்தவுடன் அவரிடம் நேரில் விசாரிக்க உள்ளார் எஸ்.பி அரவிந்தன். விசாரணையில் ஆஜராக சம்பந்தப்பட்ட 2 எஸ்.எஸ்.ஐக்கள், ஒரு காவலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. செங்கல்பட்டு எஸ்.பி எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக பெண் காவலர் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை டிஎஸ்பி போல் இவரும் பிரச்சினையை சாதாரணமாக அணுகியிருந்தால் மனம் உடைந்த பெண் காவலர் விபரீத முடிவை எடுத்திருக்கவும் கூடும். இதே செங்கல்பட்டு மாவட்டம் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது இதேபோன்று லீவு கிடைக்காத விரக்தியில் ஆயுதப்படை காவலர் தற்கொலைக்கு முயல அப்போது எஸ்.பியாக இருந்த ( தற்போது அயல் பணியில் டிஐஜியாக பதவி உயர்வில் சிபிஐயில் இருக்கிறார்) சந்தோஷ் ஹதிமானி உடனடியாக ஓடோடி வந்து அவரை அழைத்து பேசி சகோதரன் போல் நானிருக்கிறேன், இனி இப்படி முடிவெடுக்கக்கூடாது என்று லீவும் கொடுத்து அந்தக்காவலரை வீட்டில் விடச்சொல்லி அனுப்பி வைத்து அவரது பெற்றோரிடமும் பேசி தைரியமூட்டினார்.
இதேப்போன்று சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய நட்ராஜ் பெண் காவலர்களுக்காக மொபைல் டாய்லெட் கொண்டுவந்தார். சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் எந்நேரமும் காவலர்கள் குறைகளை நேரடியாக சந்தித்து சொல்ல அனுமதித்தார். அவர்களிடம் அதிகாரியாக இல்லாமல் இயல்பாக உரையாடியதாக காவலர்கள் கூறுவர். அதிக அளவில் காவலர்கள் செயல்பாராட்டப்பட்டு பரிசளிக்கப்பட்டதும் ஏகேவி காலத்தில்தான்.
லீவு பிரச்சினை, உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான காவலர்கள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். அற்ப காரணத்துக்காக தற்கொலை என தோன்றினாலும் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம், பல்வேறு மன அழுத்தங்களை பணியில் சந்திக்கும் ஒரு துறை காவல் துறை என்பதால் உணர்ச்சி வசப்படும் காவலர்கள் இம்முடிவுக்கு செல்கின்றனர்.
இதற்காக கவுன்சிலிங் போன்றவை கொடுக்கப்பட்டாலும், உயரதிகாரிகள் கடமையுணர்வுடன் மனிதாபிமானிகளாகவும் சிறிதளவு கீழே பணியாற்றும் கடைகோடி காவலர்களின் பிரச்சினையக் காதுகொடுத்து கேட்டாலே காவலர்கள் தற்கொலை பெரிதளவில் குறையும். எஸ்.பி அரவிந்தனின் இம்முயற்சி காவலர்களிடையே பெருமிதத்துடன் பகிரப்படுகிறது.