தூத்துக்குடி : ஒரே நாளில் 4 கடைகளிலும் கைவரிசை காட்டிய மர்மகும்பல்
தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பையொட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு லாரி புக்கிங் அலுவலகங்கள், ஜெராக்ஸ் கடை, ரெடிமேட் கடை ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் லாரி புக்கிங் ஆபீசுக்குள் நுழைந்து, அங்கிருந்த டிராயரின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.
இதையடுத்து அதற்கு அடுத்தாற்போல் உள்ள லாரி புக்கிங் ஆபீசின் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த லேப்டாப்பையும், அதற்கு அடுத்தாற்போல் இருந்த ஜெராக்ஸ் கடை, ரெடிமேட் கடைகளை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறக்க வந்த 4 கடைகளின் உரிமையாளர்களும் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் 4 கடைகளின் பூட்டுக்களை இரும்பு கம்பியால் பூட்டை உடைப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இதே வணிக வளாகத்தில் ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தின் உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்த சம்பவத்தில் இன்னும் துப்பு துலங்கவில்லை. எனவே அந்த நபர்களே மீண்டும் இந்த 4 கடைகளையும் உடைத்து கொள்ளையடித்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி