“என்ன புத்தி இது” மீன் நாற்றம் வீசியதால் மீனவப்பெண்ணை இறக்கி விட்ட அரசு பேருந்து நடத்துனர்!!
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்யும் மூதாட்டி ஒருவர், பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாணியகுடி பகுதியை சேர்ந்த செல்வம் என்ற மூதாட்டி, மீன் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று மீன் விற்பனை செய்து முடித்து விட்டு, வீட்டுக்கு செல்ல வாணியகுடி அரசு பேருந்தில் ஏறியபோது, அவரின் உடலில் மீன் விற்ற துர்நாற்றம் வீசுவதாக கூறி, பேருந்தின் நடத்துநர் அவரை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டிக்கு பேருந்து நிலையத்தில் கத்திக் கூச்சலிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அவரின் ஆத்திரத்துடன் கூடிய அந்தப் பேச்சை பார்க்கும் மக்கள் அனைவரும் பெரும் கொந்தளிப்புக்கு ஆளாகினர்.
ஒரு மீன் தொழில் செய்யும் ஒரு மூதாட்டியை, இப்படி துர்நாற்றம் வீசுவதாக சொல்லி கீழே இறக்கி விடுவது மிக கொடூரமான செயல்., அந்த நடத்துனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளச்சல் அரசு பேருந்து பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளார்.