வேலூர்: பெட்ரோல் பங்குகளில் ஆயில் வாங்கினால் இலவசமாக மாற்றித்தருவதாகவும், அத்துடன் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக தருவதாகவும் கூறுவார்கள் . அப்படி ஆயில் வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்று நடந்த மோசடிக்கு எதிராக வக்கீல் வழக்கு போட்டார். இந்த விவகாரத்தில் வக்கீலுக்கு ரூ.70 ஆயிரம் இழப்பீடு வழங்க வேலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் ஆயில் வாங்கினால் இலவசமாக மாற்றித்தருவதாகவும், அத்துடன் 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக தருவதாகவும் கூறுவார்கள். சில இடங்களில் அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக தருவதாகவும் கூறுவார்கள். சில இடங்களில் பெட்ரோலுக்கு பதில் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட சில பரிசு பொருட்களும் தருவார்கள். கடைகளின் விருப்பத்தை பொறுத்து பரிசுகள் மாறுபடும்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் வக்கீல் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் -வாணியம்பாடி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு ஆயில் வாங்க சென்றிருக்கிறார. அங்கு ரூ.377 செலுத்தி ஒரு லிட்டர் ஆயிலை வாங்கியிருக்கிறார். அந்த ஆயில் டப்பாவில் ஒரு லிட்டர் ஆயில் வாங்கினால் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று எழுதியுள்ளார்கள். இதைப்பார்த்த வக்கீல் விஜயகுமார் அரை லிட்டர் பெட்ரோல் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவருக்கு பெட்ரோல் கொடுக்கவில்லை. விளம்பரத்தை பார்த்து ஆயில் வாங்கியதால் வேறு பணம் இல்லாததால் பெட்ரோல் போடாமல் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டே விஜயகுமார் சென்றாராம். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகினாராம். இதையடுத்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மீது வக்கீல் விஜயகுமார் வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி சுந்தரம் விசாரணை செய்தார். விளம்பரத்தில் உள்ளபடி விஜயகுமாருக்கு பெட்ரோல் வழங்கப்படவில்லை. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் வழக்கு தொடர்பாக நீதிபதி அளித்த தீர்ப்பில், பெட்ரோல் பங்க் மற்றும் ஆயில் டீலர் ஆகியோர் சேர்ந்து தலா ரூ.25 ஆயிரம் மற்றும் வழக்கு செலவின தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரம் இழப்பீடாக விஜயகுமாருக்கு வழங்க வேண்டும் என்றும், மேலும் அந்த ஆயில் டீலர்ஷிப்பை பெட்ரோல் பங்க் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று கூறினார். பெட்ரோல் பங்கில் ஆயில் வாங்கினால் இலவசமாக பெட்ரோல் என்று கூறி பெட்ரோல் மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றங்களை நாட முடியும் என்பதற்கு இந்த தீர்ப்பு உதாரணமாகும்.