மாணவர்கள் படியில் தொங்கினால் ஓட்டுநர் நடத்துனர் மீது நடவடிக்கை : போக்குவரத்து எச்சரிக்கை!!
தமிழக அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தால், அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அரசு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி விடும் நேரங்களில் போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட காரணத்தினால், குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் அதிகப்படியான மாணவர்கள் பயணம் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
இதன் காரணமாக பல ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் படிகட்டில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டனர். தற்போது அதில் குரங்கு வித்தை காட்டி, சவுக்கு மணி அடிக்கவும் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணித்தால், அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும், பாதுகாப்பான முறையில் மாணவர்கள் ஏறி- இறங்குவதை உறுதி செய்த பின்பே ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க வேண்டும் என்றும், பேருந்தில் போதிய இட வசதியை ஏற்படுத்திக் கொடுத்து, பயணிகளை, மாணவர்களை படிக்கட்டில் நிற்க விடாமல் நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் பட்சத்தில், அந்த தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க உயரதிகாரிகளுக்கு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது .மேலும், இதுகுறித்து அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.