தொடங்கிய இடத்திலேயே அனாதையாக இறந்த “மாநகர காவல்” திரைப்பட இயக்குனர்!!
நடிகர் விஜயகாந்த் க்கு திரையுலகில் பெரும் வெற்றியையும் திருப்பு முனையாகவும் அமைந்த படம் என்றால் மாநகர காவல் திரைப்படத்தை கூறலாம்.அப்படம் பட்டிதொட்டி எங்கும் கொண்டாடப்பட்டது. ஆனால், மாநகர காவல் என்ற படத்தை தந்த இயக்குனர் எம்.தியாகராஜன், சென்னை மாநகர தெருக்களில் அநாதையாக அலைந்து திரிந்து உயிரிழந்த சோகம் இன்று நடந்துள்ளது.
ஏ.வி.எம்.ன் 150ஆவது படமான விஜயகாந்த் நடித்து வெளியான மாநகர காவல், பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, பொண்ணு பார்க்க போறேன் ஆகிய படங்களை இயக்கியவர் எம்.தியாகராஜன். இன்று அதிகாலை சென்னையில் ஏ.விஎம்.எம். ஸ்டுடியோ எதிரிலேயே தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். ஆரம்பகாலத்தில் சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று பின் அதிலிருந்து மீண்டு சினிமாவில் படங்கள் இயக்கினார்.வடபழனியில் அழுக்கான உடை, கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.