மயிலாடுதுறையில் விலங்கியல் ஆசிரியர் தற்கொலை முயற்சி….
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே கோமல் எனும் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,400, மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில், 36 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி தலைமை ஆசிரியை சித்ரா ஆசிரியர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் தலைமை ஆசிரியர் அவ்வாறு கடுமையாக நடந்து கொள்வதன் காரணமாகத்தான் அனைத்து ஆசிரியருடன் கடுமையாக நடந்து கொள்வதாக சிலர் தெரிவித்தனர். இந்த பள்ளியில் முதுநிலை விலங்கியல் ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம்போல் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பாட குறிப்பேட்டில் கையொப்பம் பெறுவதற்காக தலைமை ஆசிரியை அறைக்கு சென்றுள்ளார். ஆனால் தலைமை ஆசிரியை சித்ரா பாடக் குறிப்பேட்டில் கையெழுத்திடாமல் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஏற்கனவே இருவருக்குமிடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான விலங்கியல் ஆசிரியர் செந்தில் பள்ளி வளாகத்திலேயே தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கி உள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு தெரிவிக்க உடனடியாக அவர் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆசிரியர் செந்தில் தற்கொலைக்கு முயன்றதற்கு தலைமை ஆசிரியர் சித்ரா கொடுத்த மனஉளைச்சலே காரணம் என கூறிய மற்ற ஆசிரியர்களின் ஒரு பிரிவினர், இதுகுறித்து காவல்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெற்றோர் ஆசிரியர்சங்க தலைவர் ராகவன் கூறுகையில், ‘8 மாதத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை சித்ரா ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமலும், மாணவர்கள் மத்தியில் திட்டுவதுமாக இருந்துள்ளார். பள்ளிக்கு உரிய நேரத்தில் வராத சித்ரா ஆசிரியர்களை அவமரியாதை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார், பலமுறை கூறியும் தனது தவறை திருத்தி கொள்ளவில்லை.
ஆசிரியர் செந்திலிடம் பாடக்குறிப்பில் கையொப்பம் போடாமல் நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராவின் செயலால் மாணவர்கள், ஆசிரியர்கள் என இரு தரப்பினர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே மாவட்டக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு விலங்கியல் ஆசிரியரான செந்திலை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கைப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர் லைமை ஆசிரியரின் நடவடிக்கையால் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மயிலாடுதுறையில் மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.