“பள்ளி, கல்லூரி அரசு ஆவணங்களில் தமிழில் தான் இனி இனிஷியல்” அரசு ஆணை வெளியீடு!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும். அதில், முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னரே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, தமிழ் மொழியில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலுக்கு வரும் என்றும் இதை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு அரசு வெளியிட்டிருந்தது.இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், ஆவணங்களில் மாணவர்களின் பெயரை எழுதும்போது முன் எழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.