திக்…திக்….நிமிடங்கள் ஹெலிகாப்டர் விபத்திற்கு முன்…..
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு உரையாற்றுவதற்காக முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.
ஹெலிகாப்டர் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கடும் விபத்துக்கு உள்ளாகியது. இதில் முப்படை தளபதி அவரது மனைவி மற்றும் 11 அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டரில் அவர்களுடன் சென்ற வருண் சிங் என்ற அதிகாரி மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக வருண் சிங்கை பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி, அவரது மனைவி மற்றும் 11 அதிகாரிகளின் உடல்களுக்கும் தமிழக முதல்வர் கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் மலர்தூவி இரங்கலை தெரிவித்தனர். இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஹெலிகாப்டர் விபத்தின்போது கருப்புப்பெட்டி எனப்படும் பிளாக் பாக்ஸ் கண்டெடுக்கப்பட்டது. அதற்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்படும் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த ஹெலிகாப்டரை பார்த்தவர்கள் அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அச்சக உரிமையாளர் நாசர் என்பவர் இதைப் பற்றி கூறுகையில், அவரும் அவரது நண்பர்களும் ஹெலிகாப்டர் வெடித்து சிதறும் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த ஹெலிகாப்டரை பார்த்து புகைப்படமும் எடுத்துள்ளனர். கடும் பனிமூட்டம் காரணமாக அவர்கள் கண்ட சில நிமிடங்களிலேயே ஹெலிகாப்டர் வெடித்து சிதறியுள்ளது. நாசரும் அவருடைய நண்பர்களும் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய சத்தத்தை கேட்டு அந்த இடத்தை நோக்கி ஓடி உள்ளனர். அவர்களின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அங்கு சென்ற தீயணைப்புத்துறை வாகனத்தை பார்த்து நிகழ்ந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பிறகு அங்கு யாரும் இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
தாங்கள் சில நிமிடங்களுக்கு முன்பு கண்ட ஹெலிகாப்டர் இவ்வாறு விபத்துக்குள்ளானது எண்ணி மிகவும் வருந்தி உள்ளனர். இவ்வாறு நடக்கும் என்று அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். நாசரின் நண்பர் குட்டி என்பவர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதற்கு முன்பு வீடியோ ஒன்றினையும் எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.