தமிழகத்தில் கொரோனா தடுப்பு தொடர்புடைய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து வரும் டிச.13ம் தேதியன்று முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலைப்பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் முதல் நோய் தொற்று பாதிப்பானது குறைந்து வர சில கட்டுப்பாடுகளில் இருந்து அரசு தளர்வுகளை அளித்தது. இந்த தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்போது படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வந்து, இம்மாதம் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வகை இந்தியாவில் புதிய பாதிப்புகளை உருவாக்கி வரும் நிலையில், தமிழகத்தில் நோய் தடுப்பு நவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் வரும் டிச.13ம் தேதியன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு, மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும், கொரோனா 3ம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.