மாஸ்டர் ப்ளானிங் : இந்தியில் வெளியான கோவை வாக்காளரின் பெயர்!!
கோவை மாநகராட்சி தெற்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இந்தி மொழியில் வெளியிடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சிப் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா வெளியிட்டார். இதில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச் சாவடிகளும் 287 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆண் வாக்காளர்கள் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 397, 7 இலட்சத்து 68 ஆயிரத்து 736 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 278 என மொத்தம் 15 இலட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 69 வது வார்டில் பூத் எண் 842 ல் வரிசை எண் 633 புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயரும், அவர் தந்தை பெயரும் இந்தி மொழியில் வெளிவந்துள்ளது. பாரதி பார்க் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரின் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் ஆகியவை இந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. பாலினம், வயது உள்ளிட்டவை தமிழ் மொழியில் உள்ளன.
தமிழ் மொழியில் பெயர் குறிப்பிடாமல் இந்தி மொழியில் பெயர் வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புகைப்படங்கள் மற்றும் பெயர் மாறி வரும் குழப்பங்கள் உள்ள நிலையில் பெயர்கள், இந்தி மொழியில் பெயர்கள் இருப்பது வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியலில் இருந்த நபரின் பெயர் இந்தியில் தான் இருந்தது.
வாக்காளர் பட்டியலை இறுதி செய்து வார்டு வாரியாக மட்டுமே பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பெயர் இந்தியில் வந்திருப்பது தொழில்நுட்ப கோளாறு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்மந்தப்பட்ட நபர் விண்ணப்பம் அளித்து தமிழில் பெயர் மாற்றிக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்தனர்.