“ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்டு திருமணத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி….
ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட் சோடா மண்டி எனும் இடத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுள்ளது.
இந்த விழாவை, கைதாகி சிறையில் உள்ள சாமியார் ராம்பாலின் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர்.அப்போது, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி அங்கு வந்த பத்து பேர் கொண்ட கும்பல், தவறான முறையில் திருமணம் நடத்துவதாகக் கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர், துப்பாக்கியுடன் உள்ளே வந்த சிவப்பு சட்டை அணிந்த நபர், ஒருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இதில், தேவிலால் மீனா என்பவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.