டாப் கியர் போட்டு அதிரடி அப்டேட் கொடுத்த ஜியோ!!
தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது அசரடிக்கும் திட்டங்களால் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி உயர்ந்து வருகிறது.
மேலும் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்த்து வருகிறது. அவ்வப்போது அறிவிப்புகள், பயனாளர்களுக்கு சலுகைகளை அளித்து வருவதால் ஜியோ பயனாளர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
தற்போது அதே உற்சாகத்துக்கு தீணி போட்டுள்ளது ஜியோ நிறுவனம். இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கும் இந்த வேளையில், ஜியோ நிறுவனத்தின் புதிய ரீசார்ஜ் திட்டம், பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை அசைத்து பார்த்துள்ளது. அதாவது, ரூ.1 செலுத்தினால் போதும் என்று ஒரு திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் உள்ள எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமும், இதுபோன்ற மலிவு விலை திட்டங்கள் இன்னும் செயல்பாட்டில் இல்லை. அந்த வகையில், நாட்டிலேயே மிக மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமையையும் ஜியோ தன் வசமாக்கியுள்ளது.
இந்த திட்டத்தில் இணையும் பயனர்களுக்கு 100எம்பி டேட்டா கிடைக்கும். இது செல்லுபடியாகும் கால அளவு 30 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிவேக 4ஜி இணைப்பு மூலம் இந்த டேட்டாவை பயன்படுத்தமுடியும். 100எம்பி அளவுக்கு மேலான பயன்பாட்டிற்குக் கட்டணமில்லாமல் 64kpbs என்ற வேகக் குறைவான டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த வசதியைப் பெற, ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio செயலில் உள்நுழைந்து, ரூ.1 திட்டத்தைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். மேலும், ரூ.15 ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா கிடைக்கும். இதனைப் பயன்படுத்தும் கால அளவு நடப்பு திட்டத்தை ஒத்திருக்கும். வேறெந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடமும் இது போன்ற திட்டம் இல்லை.
போட்டி நிறுவனங்களான ஏர்டெல் ரூ.19க்கு 200எம்பி டேட்டா 2 நாள்கள் வேலிடிட்டியுடனும், வோடபோன் ரூ.19க்கு ஒரு ஜிபி டேட்டாவை ஒரு நாள் வேலிடிட்டியுடனும் வழங்குகிறது. இதுவே இந்நிறுவனங்களிடம் இருக்கும் டேட்டா திட்டங்களில் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.