பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் : தலைமை ஆசிரியர், தாளாளர், ஒப்பந்ததாரர் கைது!!
நெல்லை டவுன் பகுதியில் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 11 மணிக்கு பள்ளி இடைவேளை விட்ட நேரத்தில் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறை மாணவர்கள் மீது தடுப்புச் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சூழலில் பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடலும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் 3 மாணவர்களின் உடல் வைக்கப்பட்டு இருந்த பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்று போக்குவரத்து துறை அமைச்சர், சபாநாயகர், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று மாணவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை வழங்கினர்.
அதன்பின்னர் உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டு சென்றனர்.அதனை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்பொழுது, ‘நெல்லை சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமோன் செல்வராஜ், பள்ளி முதல்வர் ஞான செல்வி, மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருப்பின் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.