ரிப்பிட்டே: தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!!
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர் .கடந்தவாரம் , முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடைபெற்றது .
அப்போது கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் நாமக்கல் , சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் .இதே போல் , சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள , தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
ஈரோட்டில் , முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடைபெறுகிறது . அதன்படி , ஈரோடு சாந்தங்காடு பகுதியிலுள்ள தங்கமணி உறவினர் குமார் என்பவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
நாமக்கல் மாவட்டம் பெரிபட்டியில் உள்ள அவரது நண்பர் மோகன் வீடு , ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள நட்சத்திர அப்பார்ட்மெண்ட் மற்றும் மோகனூர் சாலையில் உள்ள ஈஷா அப்பார்ட்மெண்ட் ; குமாரபாளையத்தில் தங்கமணியின் நண்பர் மூர்த்தி வீடு , கொல்லிமலையில் உள்ள PST தங்கும் விடுதி , பரமத்தி வேலூர் பொத்தனூர் சண்முகம் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .