10,11,12 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு!!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையிலும் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியதும் மேல்நிலை வகுப்புகளுக்கும் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. அதனால், மாணவர்களின் நலன் கருதி மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். ஆனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் தேர்வு நடைபெறவில்லை.அதனால், மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது அரசின் முயற்சியாலும், கொரோனா தடுப்பூசிகள் பயன்பட்டாலும் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
தற்போது அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து தற்போது, ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
மேலும், ஜனவரி 3வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.