தமிழகத்தில் கொரோனா 3வது அலை : தமிழக அரசு எச்சரிக்கை!!
கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3-வது அலை தொடங்கி விட்டதால் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று (2-ம் தேதி) 17-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. சென்னை கோடம்பாக்கம் ஆலந்தூர் சாலையில் நடந்த தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
“தமிழகத்தில் 86.22 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 58.82 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 69 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மாநில அளவைவிட சென்னையில் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், சென்னையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். உலகம் முழுவதும் தொற்றின் அளவு மிக வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து தமிழகத்தில் 3-வது அலையை தொடங்கி விட்டது.இன்று (3ம் தேதி) முதல், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33.20 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அந்தவகையில், பள்ளிகளில் மட்டும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஏறத்தாழ 26 லட்சம் மாணவர்கள் இருக்கின்றனர்.
தமிழகத்தில் 4 லட்சம் இன்ஜினீயரிங் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 46 சதவீத மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 12 சதவீத மாணவர்கள் 2-வது தவணை தடுப்பூசியும் மட்டுமே செலுத்தி உள்ளனர். எனவே இந்த மாணவர்களையும் இலக்கு வைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.முன்கள பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வருகிற 10-ந்தேதி முதல் போடப்பட உள்ளது.
குறிப்பாக யாருக்கெல்லாம், 2 தவணை தடுப்பூசி செலுத்தி முடித்து 9 மாதங்கள் முடிந்திருக்கிறதோ, அவர்களுக்கு 10-ந்தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். கோவிஷீல்டு, கோவேக்சின் அதில் எதை பூஸ்டராக செலுத்த வேண்டும் என மத்திய அரசு 2 நாளில் தகவல் தெரிவிக்கும்.கொரோனா தொற்று வேகம் பெரிய அளவில் உருவெடுக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த மே மாதம் 21-ம் தேதிதான் அதிகளவில் 36 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது, அந்த எண்ணிக்கையை விட அதிகமான பாதிப்பு இருக்குமா என்ற அச்சம் உள்ளது.ஓமைக்ரான் வைரஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கு 3 நாளில் தொற்று இல்லை என முடிவு வந்து விடுகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாள் சிகிச்சை பெற்றால் போதும். அதன் பிறகு அவர்களை வீட்டு கண்காணிப்புக்கு அனுப்பலாம் என திட்டமிட்டுள்ளோம்.தொற்றின் எண்ணிக்கை கூடுதலாக வந்து கொண்டிருப்பதால் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வரவேண்டுமா? என்ற கேள்விக்குறி இருக்கிறது.
அந்தவகையில் தொற்றின் எண்ணிக்கை கூடுதலாகும்போது, 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை வீடுகளிலேயே கண்காணிக்கும் பணியும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல், அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று வந்தால், அவர்களுக்கு அரசின் சார்பில் ‘ஆக்சிமீட்டர்’ (ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி) வழங்கி வீட்டிலேயே தனிமைப்படுத்தி மருத்துவ குழு மூலம் கண்காணிக்கும் பணியையும் செய்ய இருக்கிறோம்.சென்னையில் ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகளும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2 ஆயிரம் படுக்கைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் விக்டோரியா விடுதியில் உள்ள மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்து விடுதியை காலி செய்து கொடுக்குமாறு கேட்டு இருக்கிறோம். அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.அதேநேரம் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சென்னை, செங்கல்பட்டில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க 3 வகையான கண்காணிப்பு அமைப்புகளை அறிவித்துள்ளோம்.அந்தவகையில் அதிகமான பாதிப்பு உடையவர்களை ஆஸ்பத்திரிகளிலும், மிதமான பாதிப்பு இருப்பவர்களை சிகிச்சை மையத்திலும், அறிகுறி இல்லாதவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தியும் சிகிச்சை அளிக்கப்படும். தொற்று நடவடிக்கையை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.