மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது !!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பணமோசடி வழக்கில் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பாலவளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவரும் அவரது நண்பர்களும் பாலவளத்துறை மற்றும் மற்ற அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 கோடிக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரைத்தொடர்ந்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்மீதான விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டு வழக்கு எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அதேபோல் ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கையும் கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜி கோரிய முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை பிடிக்க கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்தது.
கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும் இதுவரை ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என தெரியாமல் காவல்துறை தேடி வந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஓசூரில் சற்று முன் கைது செய்யப்பட்டார்
இந்நிலையில்,19 நாட்கள் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களை கர்நாடகாவில் கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை