பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ அண்ணாமலை தலைமையில் மதுரையில் மகா யாகம் நடைபெற்றது.
மதுரை : திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து மகா மிருத்யுஞ்ஜய யாகம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கடந்த 5ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கச் சென்றார். அப்போது, அவர் செல்லும் பாதையில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இந்த துரதிர்ஷ்ட சம்பவம் மாநில அரசின் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக ஏற்பட்டது. இதனால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் நரேந்திர மோடியின் வாகன பாதுகாப்பு வளைய கான்வாய் 20 நிமிடங்கள் நின்றது. இதன் பின்னர் பிரதமர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்படும் முன் அம்மாநில உயர் அலுவலர்களிடம் நரேந்திர மோடி, ‘நான் உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதலமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவியுங்கள்!’ எனத் தனது உச்சகட்ட அதிருப்தியையும், வேதனையையும் வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, மத்திய உள் துறை அமைச்சகம் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அண்ணாமலை, தனது கண்டனத்தைப் பதிவுசெய்ததோடு, ‘பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்த பஞ்சாப் அரசைக் கண்டித்து’ என்ற தலைப்பில் மதுரையில் கண்டன ஊர்வலம் நடத்தினார்.
இந்த நிலையில் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மதுரை மாவட்ட பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மகா மிருத்யுஞ்ஜய யாகம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.அண்ணாமலை தலைமையில் யாகம்
இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநிலப் பொறுப்பாளர்கள், மதுரை மாவட்ட செயலாளர்கள் யாகத்தில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.