முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜக நிர்வாகிகள் அடைக்கலம் கொடுத்தாக போலீசார் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடியின் காரை போராட்டக்காரர்கள் சிலர் மேம்பாலத்தின் மீது வழிமறித்தனர். இது தொடர்பாக வெளியான ஃபோட்டோக்களில் மேம்பாலம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பிரதமர் மோடி காத்திருக்கிறார்.
அவரை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்தபடி இருந்தனர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் பிரதமர் மோடி வேறுவழியின்றி திரும்பினார்
ஆளுநருடன் சந்திப்பு
இது பிரதமரின் பாதுகாப்பில் பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாகப் பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் குற்றஞ்சாட்டி இந்தியா முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தங்கள் ஆதங்கத்தை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிப்போம் என அண்ணாமலை கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சென்னை ஆளுநர் மாளிகையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜக தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினர்.
என்ன ஆலோசனை
அப்போது பிரதமர் மோடி பாதுகாப்பு மீறல் குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தவிரத் தமிழக அரசியல் சூழல், நீட் விவகாரம் குறித்து நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான கடிதத்தை அண்ணாமலை ஆளுநரிடம் நேரடியாக அளித்தார்.
கடிதம்
அதில், பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி பிரதமரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் கான்வாய் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட இடம், பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் ஆதரவு
அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ‘பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து எங்கள் ஆதங்கத்தை ஆளுநரிடம் பதிவு செய்தோம். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குக் கட்டாயம் தேவை என்பதை நாளை (08/01/2022) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துரைப்போம். நீட் தேர்வு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்பார். நீட் தேர்வு தேவை என்பதை நாளைய கூட்டத்தில் வானதி சீனிவாசன் வலியுறுத்துவார். நீட் தேர்வின் சாதகங்கள் குறித்து நாளையக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும்’ என்றார்.
ராஜேந்திர பாலாஜி
தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு பாஜக நிர்வாகிகள் அடைக்கலம் கொடுத்தாக போலீசார் கூறியுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்த பா.ஜ.க. நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க உள்ளோம்’ என்று தெரிவித்தார். மேலும், பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்குப் பஞ்சாப் அரசுதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் பஞ்சாப் அரசைச் சாடினார்.