நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அப்பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை பாப்பாக்கோவில் ஏறும் சாலை அருகேயுள்ள அவருடைய வீட்டு வாசலில் எறிந்த நிலையில் உடல் கருகி சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் மற்றும் விசிகவினர் ராஜ்குமார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாரோ கொலை செய்து இருக்கலாம் என்றும் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விசிக நிர்வாகி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாப்பாக்கோவில் ஏறும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி சரவணன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு கலைந்து சென்றனர், இதன் காரணமாக நாகை – வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: ச.ராஜேஷ்