நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று !!
கொரோனா 3 ஆவது அலையான ஒமைக்ரான் நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதனால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 31ஆம் தேதி தொடங்கவுள்ள சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை செயலக ஊழியர்கள் 271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் தொற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதிக்கப்பட்ட 875 ஊழியர்களுடன் தொடர்பு கொண்ட பல ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஊழியர்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.