சங்கரன்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்த வாலிபர் அடித்துக் கொலை. நகைகளை பறித்த மர்ம கும்பல் வெறிச்செயல்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே இரு சக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இன்று இரவு இருவரும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமி – முத்துமாரி தம்பதியினரை வழி மறித்ததாக கூறப்படுகிறது. மேலும் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 30கிராம் நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது. அப்போது வைரவசாமிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கும் கைகலப்பு ஏற்பட வைரவசாமி சரமாரியாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் காரில் வந்த மர்ம கும்பல் முத்துமாரியின் நகைகளுடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்தும், கொலைக்கான பிண்ணனி குறித்தும் சேர்ந்தமரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.