ச.ராஜேஷ்
மயிலாடுதுறை 05.11.2022
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் ஜப்பானியர்கள் தரிசனம்:- தமிழ் மொழி, சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய வந்துள்ளதாக தகவல். தமிழ் மொழியுடன் ஜப்பானிய மொழி அதிகம் ஒத்துப்போவதாக பெருமிதம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 16 பேர் இன்று பஞ்சாட்சர ஹோமம், நவசக்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களை நடத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்தும், சித்தர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து தமிழகம் வந்துள்ள இவர்கள் கடந்த ஒருவாரமாக பல்வேறு கோயில்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மாயூரநாதர் கோயிலில் மாயூரநாதர் சன்னதி, அபயாம்பிகை சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்து, திருநீறு, விபூதி அணிந்து, தரையில் விழுந்து வணங்கி வழிபாடு மேற்கொண்டனர். தமிழகத்தில் இருந்து ஜப்பான் நாட்டுக்குச் சென்று கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் நடத்திவரும் டாக்டர் சுப்பிரமணியம் என்பவரின் ஏற்பாட்டில், டாக்டர் தக்காயுகி ஹோஷி என்பவரின் தலைமையில் இக்குழுவினர் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜப்பானி தொழிலதிபர்கள் பலர் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.