
மயிலாடுதுறை கலவர சம்பவம் : காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….
அம்பேத்கர் நினைவு தினத்தன்று மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தியில் அம்பேத்கர் படம் வைத்து அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தை கண்டித்தும், தடுக்கத் தவறிய காவல்துறை மற்றும் வருவாய் துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறையில் தடையை மீறி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு. மூன்று மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது ஏற்பட்ட மோதலில் இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அம்பேத்கர் திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டவர்களை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், கலவரத்தை தடுக்காத காவல் துறை, வருவாய் துறையினரை கண்டித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தால் கச்சேரி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
செய்திகள் : ச.ராஜேஷ், மயிலாடுதுறை