பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்.
தென்காசி மாவட்டம், ஆசாத்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் சூழலில் இந்த கல்லூரியில் பயின்று வரும் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்து குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் தான் டிப்ளமோ ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் என்ற பிரிவில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருவதாகவும் தன்னுடைய கல்லூரி தாளாளரான முகமது அன்சாரி (வயது 45) என்பவர் தனக்கும் தன்னுடன் பயின்று வரும் சக மாணவிகளுக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழங்கி வருவதாகவும் தன்னை தனியாக அழைத்து ஆபாசமாக பேசியதாகவும் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
அதன் அடிப்படையில், கல்லூரி தாளாளரான முகமது அன்சாரி என்பவர் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம் ஆபாசமான முறையில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசியதும், ஒவ்வொரு மாணவியாக தனியாக அழைத்து இது போன்ற பாலியல் உணர்வுகளை தூண்டும் வார்த்தைகளை பேசி பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் வீட்டிலோ வேறு சக மாணவகளிடமோ கூறினால் உனது மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் எனவும், எப்படி நீ சான்றிதழ் வாங்குகிறாய் எனவும் கூறி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
குறிப்பாக, தனது குடும்பத்தை எப்படியாவது தான் படித்து முன்னேற்றி விட வேண்டும் என்ற ஒரு கொள்கையோடு கட்டுக்கோப்பாக பயின்று வரும் கிராமத்து மாணவிகள், தான் எப்படியாவது படித்துவிட்டு வெளியே சென்றால் போதும் என நடந்ததை எல்லாம் வெளியே கூறாமல் மறைத்துள்ளனர்.
இந்த நிலையில், எல்லை மீறி போன இந்த தொந்தரவின் காரணமாக வெகுண்டு எழுந்த ஒரு மாணவி தற்போது அளித்துள்ள இந்த புகார் சம்பவத்தால் அந்த தனியார் கல்லூரியில் நடைபெற்று வந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த கல்லூரியில் தாளாளரான முகமதுஅன்சாரி வாரம்தோறும் திங்கட்கிழமை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில நடைபெறும் கூட்டத்திற்கு அதிகாரிகள் மற்றும் அங்கு வருபவர்களுக்கு பணிவிடை செய்வதற்காக கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி வந்ததும், இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு பல்வேறு சட்ட விரோதமான செயல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆகவே இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி போலீசார் உண்மையை வெளிக் கொணர வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தென்காசி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் தாளாளர் இதுபோன்று மிரட்டி மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கல்லூரி தாளாரான முகமது அன்சாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.