தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான சத்யா என்பவர் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்த கோரி மனு ஒன்றினை அளித்தார்.
மேலும், அந்த மனுவில் குடிப்பழக்கத்தால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்கள், விபத்துக்கள் மற்றும் தனி நபர்கள் பாதிப்பு, குடும்ப பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்து இதுவரை மதுவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துக்கள் குறித்தும் தெளிவான அறிக்கையுடன் மனு ஒன்றினை சமர்ப்பணம் செய்தார்.
அதேபோல், தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த நிலையில், மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறி தமிழக அரசு இதுதொடர்பான விஷயத்தில் நாடகம் ஆடி வருவதாகவும், ஆகவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் உடனடியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இது தொடர்பான மனுவினை அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.