நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இயற்பியல் துறை மற்றும் நெல்லை வானியல் கழகம் இணைந்து, உலகமே வியந்து எதிர்பார்த்து கொண்டு இருக்கும், ரூபாய் 615 கோடி செலவில் இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள சந்திராயன்-3 நிலவில் கால்பதிக்கும் நிகழ்வு சிறப்புக் கருத்தரங்கு மற்றும் நேரலை நிகழ்ச்சியை நேற்று மாலை 4 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தின.
சந்திராயன் -3 சிறப்புக் கருத்தரங்கில் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் முகமது ரோஷன் வரவேற்புரை வழங்கி தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் மாணவர்களை அறிவியல் சார்ந்து மேலும் கற்க ஊக்குவிக்கும் வகையில் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ. செய்யது முகமது காஜா வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் சந்திரயான் பயணத்தின் சுருக்கமான வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி முனைவர் அஸ்வீல் அஹமட் ஏ ஜலீல் சிறப்புரையாற்றினார்