தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளை குறி வைத்து வெறிநாய்கள் கடித்து வருகின்றன. கடையநல்லூரில் 2 சிறுவர்களை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக வடகரை, அச்சன்புதூர் சுற்று வட்டாரத்தில் வெறிநாய்கள் 20-க்கும் அதிகமானோரை கடித்துக் குதறியது. இதேபோன்று புளியங்குடி சங்கரன் கோவில் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 20 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இப்படி மாவட்டம் முழுவதும் நாய்கள் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது. நகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் *இதுவரை அசம்பாவிதங்கள் நடந்துள்ள என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நேற்று முன்தினம் மாலைநேரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ரகுமானியாபுரம் 12வது தெருவைச் சார்ந்த உசேன் மகன் முகம்மது இத்ரீஸ்( வயது 7) அக்ஸா பள்ளிவாசல் தெருவை சார்ந்த அப்துல்லா மகன் அஹமது( வயது 5) ஆகிய இருவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவ்வழியே வந்த வெறி நாய் ஒன்று கடித்து குதறியது. இதனைக் கண்ட பெரியவர்கள் குழந்தைகளை கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஒரு சிறுவன் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் சுமார் 20 நபர்கள் வெறி நாய் கடித்ததில் மருத்துவமனையில தங்கி சிகிச்சை பெற்றுவந்தனர். புளியங்குடி நகராட்சி நிர்வாகம் வெறி நாய் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தனர்.
கடைய நல்லூர் நகராட்சியில் இரவு 7 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடைபெற்றதால் முகநூல் மற்றும் வாட்சப மூலம் வதந்தி பரப்பியதால் மருத்துவமனையில் கூட்டம் கூடியது. இதனால் மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே விவாதம் ஏற்பட்டது. இது குறித்து இரவோடு இரவாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ.கட்சி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவனை திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான டாக்டர் செல்லத்துரை தலைமையில், நகர திமுக செயலர் அப்பாஸ் நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான் மைதீன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது குறித்து தகவலறிந்த ஆணையர் சுகந்தி உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களை தேடி பிடித்துக் கொண்டுவந்தனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு நாய் பிடிபட்டது.
கடைய நல்லூர் நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தெருக்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பிராய்லர் கடைகள் முளைத்து போட்டி போட்டு விற்பனை செய்கின்றனர். பண்ணையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளில் நன்கு வளராத கோழிகளை பண்ணையில் உள்ளவர்களே கழித்துவிடுவார்கள்.
வியாபாரிகள் போட்டி வியாபாரத்தில விலையை குறைத்து விற்க கழிவு கோழிகளையும சேர்த்து அறுத்து விடுகிறனர். இந்த பிராய்லர கோழி கடை கழிவுகளை பிளாஸ்டிக் ட்ரம் களில் சேகரித்து பன்றி வளர்ப்பவர்கள் பன்றி தீவனமாக எடுத்து வருகின்றனர்.
சில கடைகளில் கழிவுகளை அகற்றுவதில் கால தாமதத்தின் போது அந்தப் பகுதியில் நடந்து செல்லும் போது பொதுமக்கள் முகத்தை மூடிச் செல்லும் போது குடலை வெளியேற்றும் அளவு குமட்டல் இருக்கும். கோழி ரத்தம் தெருக்களில் சிந்தி ஈ மொய்ப்பதால் அருகிலுள்ள கடைக்காரர்கள் வாய் மூடி மெளனம் காத்து வருகின்றனர். இம்மாதிரி தோழிக்கழிவுகளை தின்பதற்காக வரும் நாய்கள் ஒன்றோடொன்று போட்டிபோட்டு உறுமி பொதுமக்களை ஓட வைக்கிறது.
நாய் தொல்லையை கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி நிர்வாகம் கோழிக்கடைகளிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை வெளியேற்ற முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர். துரை ரவிச்சந்திரன பொறுப்பேற்றவுடன் உணவு மற்றும் கலப்பட துறை மூலம் ஓட்டல்கள சோதனை செய்யப்பட்டு கெட்டு போன இறைச்சிகளை பிரீசர் மூலம் பதப்படுத்தி மறுநாள் விற்பனை செய்யும் உணவகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவரது உத்தரவை நிறைவேற்றும் வகையில் கடைய நல்லூர் நகரில் உள்ள உணவகங்களை உணவு பாதுகாப்பு துறையினர் அடிக்கடி திடீர் சோதனை செய்ய வேண்டும். நகராட்சி சுகாதார துறையினர் கோழிக்கழிவுகளை அகற்றுவதில் தனி அக்கறை செலுத்தி கழிவுகளை ரோட்டில் வீசிச் செல்லும் கோழிக் கடையினர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெறிநாய்களை கண்டறிந்து அவற்றை பிடித்து மலைப்பகுதியில் கொண்டு விடுவதில் நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.