குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று நடந்த தீ விபத்தில் 20க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசமாகின. இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை புதிதாக தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் அரசு உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்துவேன் என்று உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கிருஷ்ணசாமி கூறியதாவது- விதிகளை மீறி கோவில் சுவற்றை ஒட்டி கடைகள் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடுகளுடன் இங்கு கடைகள் நடத்தப்பட்டு இருக்கிறது. எனவே இதற்கு அனுமதி கொடுத்த கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டதற்கு கண்ணதாசன் தான் முழு பொறுப்பு. எனவே இழப்பீட்டை அவரது சம்பளம் மற்றும் பிஎப் தொகையிலிருந்து பிடித்தம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். மனிதநேய அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். இதில் எந்த வித காலதாமதமும் செய்யக்கூடாது. அதிர்ஷ்டவசமாக மக்கள் குறைவாக உள்ள சூழலில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சீசனின் போது இந்த விபத்து ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அரசு முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.