கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுதல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் நபர்களை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
நடிகர் விஜயின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு அணி சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் சென்னை, பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசியல் கட்சிகளைப் போன்றே மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 234 தொகுதிகளை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், கரூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட மற்றும் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தளபதி தலைமையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சமூக வலைத்தளங்களில் அன்றாட நிகழ்வுகளை தவறாமல் பதிவு செய்தல்,
மாவட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் பகுதி வாரியாக மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து மாதம்தோறும் கூட்டம் நடத்த அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்தல்,
பகுதி வாரியாக வாரம் ஒரு முறை மாவட்ட தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கட்டாயம் நடத்துதல்.
மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து நிர்வாகங்கள் நடத்தும் மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றுதல்,
மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக ஆரோக்கியமான செயல்பாடுகளை மட்டும் முன்னெடுத்தல், எந்த ஒரு நபரிடமும் விவாதம் செய்யாமல் பொறுமையை கடைப்பிடித்தல்,
கல்வி மற்றும் விளையாட்டுகளில் உங்கள் பகுதிகளில் சிறந்து விளங்கும் நபர்களை அடையாளம் கண்டு மக்கள் இயக்க உறுப்பினர்களுடன் நேரில் சென்று, சால்வை அணிவித்து பாராட்டி பரிசுகள் வழங்குதல் மற்றும் உங்களால் முடிந்த உதவிகளை செய்தல் உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.