ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த அதிரடி சம்பவத்திற்கு தேதி குறித்துள்ளது இஸ்ரோ.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, சுமார் 125 நாட்கள் சூரியனை நோக்கி பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலத்தை விட 4 மடங்கு அதிக தூரத்தை கடந்து ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ளது. அங்கிருந்து சூரியன் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை ஆதித்யா எல்.1 விண்கலம் செய்ய உள்ளது.
1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை:
ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
அதோடு, நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
நேற்று ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது அது குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் சரியாக இயங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் இன்றி, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை முதல்முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தில் இருந்து கமாண்ட் கொடுக்கப்பட்டதன் மூலம், விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 245 கி.மீ x 22459 கி.மீ தொலைவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக, நாளை மறுநாள் (செப்டம்பர் 5ஆம் தேதி) காலை 3 மணிக்கு விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மேலும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகள் என்ன?
பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய உள்ளது.
கருவிகளின் விவரங்கள்:
சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer),
சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற ஆகிய கருவிகள் உள்ளன.