ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவடடத்தை சேர்ந்த பாஜ மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒரு பெண்ணிடம் ஸ்பா லைசென்ஸ் பெற்று தருவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்று கொண்டு அந்த பெண்ணை மிரட்டியதோடு, அந்த பெண்ணின் ஸ்பாவிற்கு சென்று அங்குள்ள பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 29ம் தேதி சமூக வலைத்தளங்களில் ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தது நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு:
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் வி.சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு. ராஜசேகர் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில், “திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொது செயலாளர் பி. பொன்பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் கே.எம்.ஆர்.முத்துராஜ் ஆகியோர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் பாஜக நிர்வாகிகள் செயல் பட்டு வருவது பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.