திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் 7ம் தேதி மாட்டு சந்தை ஏலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ரவி, சுரேஷ், ராஜா, ஆயக்குடி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வந்தனர். அப்போது ஏலம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து அவர்களது டி.டி யை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் 8ம் தேதி மாட்டுச் சந்தை ஏலம் ரகசியமாக நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் மீனா தலைமையில் நடந்தது. இதில் ஒருதலைப்பட்சமாக, முறைகேடாக ரூ. 65 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரியகோட்டை ஒப்பந்ததாரர் ராஜா கூறுகையில், கடந்த 2021 இல் நடந்த மாட்டு ச்சந்தையை கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த அங்குச் சாமி 2022-2023 ஆண்டுக்கு ரூ.1.81 கோடிக்கு ஏலம் எடுத்தார். இந்நிலையில் இந்தாண்டு 2023 – 2024 ம் ஆண்டு ஏலத்தில் ரூ. 65 லட்சத்திற்கு ஒத்தையூரைச் சேர்ந்த முத்துக்கண்ணு ஏலம் எடுத்துள்ளார். இது நகராட்சிக்கு ரூ.1.15 கோடி இழப்பு ஏற்படுத்தி கமிஷனர் ஒருதலைப்பட்சமாக ஏலம் விட்டுள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் தலைமையில் மாட்டு சந்தையை மறு ஏலம் விட வேண்டும் என்று தெரிவித்தார்