
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சென்னாநந்தல் கிராமத்தை சேர்ந்த சம்பத் விவசாயி. இவரது மகன்கள் லிங்கேஸ்வரன் (42), பாண்டியன் (35), இவர்களுக்கு அதே பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
மேலும், லிங்கேஸ்வரன் அவரது தம்பி இருவரும் அவர்களது விவசாய நிலத்தில் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். இதனால், அவர்கள் நடவு செய்துள்ள நெற்பயிர்களில் எலி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், எலி தாக்குதலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் லிங்கேஸ்வரன், பாண்டியன் இருவரும் அரிசியில் எலி மருந்து கலந்து நிலத்தில் சுற்றி உள்ள வரப்புகளில், பயிர்களில் விஷம் கலந்த அரிசியை வைத்துள்ளனர்.
இந்நிலையில், லிங்கேஸ்வரன் நிலத்தின் வழியாக மேய்ச்சலுக்காக வந்த, 6 மயில்கள் விவசாய நிலத்தில் விஷம் கலந்து தூவியிருந்த அரிசியை சாப்பிட்டுவிட்டு சென்ற மயில்கள், திடீரென அருகில் உள்ள நிலத்தில் மயங்கிவிழுந்துள்ளன. பின்னர் சிறிது நேரத்திலேயே விவசாய நிலத்திலேயே மயில்கள் சுருண்டு விழுந்து இறந்துள்ளன. தகவலறிந்த சென்னாநந்தல் விஏஓ, ஆரணி வனச்சரக அலுவலர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நிலத்தில் இறந்து கிடந்த மயில்களை மீட்டனர். இதுகுறித்து ஆரணி வனச்சரக அலுவலர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் விவசாயிகள் லிங்கேஸ்வரன், பாண்டியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.