திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளி ஆண்டார்-55 என்பவர் தனது வீட்டின் முன்புறம் இரவு வீதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கொடூரமான முறையில் நள்ளிரவில் கழுத்து மற்றும் உடலின் முன்புறம் பின்புறம் என சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டார் என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாகவும் , அவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெற்று ஒரு மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. தனது மகளுடன் கரியாம்பட்டி நடுப்பட்டியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் அறிந்து நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காவல்துறையிடம் கூறியுள்ளனர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டுக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தற்போது தீவிரமாக கொலையாளிகளை பிடிப்பதற்காக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
கூலி தொழிலாளி முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து மர்ம நபர்களை கைது செய்யக்கோரி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் உறவினர்கள் மனு அளித்திருந்தனர் இதனை அடுத்து காலதாமதம் செய்வதாக கூறி உறவினர்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நிலக்கோட்டை நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர் இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.