திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மலை மீதும், மலையைச் சுற்றியும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகள், கோயில்கள், ஆஸ்ரமங்கள், விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல், திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையில் இருந்த பல்வேறு கோயில் குளங்கள் அழிக்கப்பட்டு, வீடுகளாக, கடைகளாக, மனைகளாக மாற்றப்பட்டுவிட்டன.
இது தொடர்பான பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மகா தீப மலை மற்றும் மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்ட குளங்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளுடன்ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். மந்தாகினி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் மற்றும் வருவாய்த் துறை, வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.