திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் இந்தத் திருவிழாவுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன்களில் செங்கம் வழியாக திருவண்ணாமலை செல்வது வழக்கம். இதை முன்னிட்டு, செங்கம் உள்கோட்டத்துக்குள் பட்ட சந்திப்பு சாலைகளில் முள்புதர்களை சரிசெய்தல், சாலையில் பருவமழையால் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்தல், வேகத்தடை உள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைத்தல், விபத்து பகுதிகளில் எச்சரிக்கை சிகப்பு விளக்கு, மக்கள் சாலைய கடக்கும் பகுதியில் வெள்ளை அடித்தல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நகர் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் படிந்துள்ள மண்ணையும் அகற்றி வருகின்றனர். இந்தப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் ஞானவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் கோவிந்தசாமி ஆகியோர் பார்வையிட்டனர். செங்கம் உதவிப் பொறியாளர் பிரீத்தி உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.