கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், ‘அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே வேடந்தவாடி கிராமத்தில் முருகேசன், ராமலிங்கம் மற்றும் சேகர் குடும்பத்தினர் ‘அகல் விளக்கு’ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ‘மண்பாண்ட தொழிலுக்கு ஏரியில் இருந்து களிமண் எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாட்டு வண்டியில் மண் ஏற்றி வருகிறோம். இதற்க, ரூ. 500 வரை வாடகை கொடுக்கப்படுகிறது.
நாங்கள், பாரம்பரியமான ஒரு முகம் அகல் விளக்கை மட்டுமே தயாரிக்கிறோம். மண் கொண்டு வந்தபிறகு, அதனை பதப்படுத்த வேண்டும். இது சற்று சிரமமாக இருக்கும். மண்ணை பதப்படுத்த இயந்திரம் வந்தாலும், பொருளாதார வசதி இல்லாததால், மனித உழைப்பு மூலமாகவே மண்ணை பதப்படுத்துகிறோம். பின்னர், சக்கரத்தை சுழற்றி பதப்படுத்தப்பட்ட களிமண்ணை கொண்டு, அகல் விளக்கு தயாரிக்கப்படுகிறது. ஒருவர், தினசரி 350 முதல் 400 அகல் விளக்குகளை தயாரிக்கின்றோம். அதன்பிறகு, அகல் விளக்கை நன்றாக உலர வைத்து, நெருப்பை மூட்டி மிதமான சூட்டுடன் வேக வைக்கிறோம். இதில், 90 சதவீத அகல் விளக்குகள் தரமாக கிடைத்துவிடும் என கூறினார்