திருவண்ணாமலை தீபத் திருவிழா நாள்களில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செ. சிவக்குமார் தெரிவித்தார்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே, தீபத் திருவிழா நாள்களில் ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் வி. சதீஷ்குமார் தலைமை வகித்தார். திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெ. சா. ரமேஷ், மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் ஆர். பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.