திருவண்ணாமலை மாவட்டத்தில் 1. 1.2025-ஆம்தேதியை அடிப்படையாக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அக். 29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி நவ. 28-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இதுதவிர, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
முகாம்களில், தகுதியான நபர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான 6, 6 ஏ, 6 பி, 7, 8 ஆகிய படிவங்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசினார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ராம்பிரதீபன், திருவண்ணாமலை வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.