கள்ளக்குறிச்சி மாவட்டம், மேமாளூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி வசித்தனர். நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் கடந்த 9ம் தேதி இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து வீடுகளை இழந்த குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட முயன்றனர். உடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முக்கிய நபர்கள் மட்டும் மனு அளிக்க செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, கடலூர், புதுவை உயர்நீதிமன்ற மாவட்ட பொறுப்பாளர் பிளோமின் தாய் தலைமையில், 10க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கட்டித்தர வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேமாளூர் கிராமத்தில் உள்ள இடத்தை நிலவகை மாற்றம் செய்து அப்பகுதியிலேயே குடியமர்த்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கலெக்டர் பிரசாந்த், பாதிக்கப்பட்டவர்களில் நிலம் இருப்பவர்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படும், நிலம் இல்லாதவர்களுக்கு கெடிலம் மற்றும் புகைப்பட்டியில் இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.