கள்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாமில் புதிய தலைமுறை வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தி. மு.க., வினர் மும்முரமாக செயல்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட மையங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் நடந்தது.
4 நாட்கள் நடந்த முகாமில், 18 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளராக சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.முகாம்களில், தி.மு.க., அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் பங்கேற்று, புதிய வாக்காளர்களுக்கு படிவங்களை நிரப்ப உதவி செய்தல், இறந்தவர்கள் மற்றும் இரட்டிப்பாக உள்ளவர்களின் பெயரை நீக்குதல், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
இதையொட்டி, தி. மு. க., சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தலைமையில் பல்வேறு இடங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி, பூத் ஏஜெண்டுகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.தொடர்ந்து, முகாம்களில் இளம் தலைமுறை வாக்காளர்களை முகாம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருதல், படிவம் நிரப்ப உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளை தி. மு. க., வினர் மும்முரமாக செய்தனர். ஒரு சில இடங்களில் த. வெ.க., நிர்வாகிகளும் ஆர்வத்துடன் செயல்பட்டனர்.