திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவர், சென்னையில் பிஎஸ்சி கணிதம் படித்து வருகிறார்.
இவர், சென்னையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்கும் போட்டிகளுக்காக தொடர் பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியின் போதே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.
இந்த நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 45 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, உலகின் வலிமையான பெண் என்ற பட்டத்தை பெற்று சாதனைப் படைத்தார். ரஷ்யாவில் இருந்து செய்யாறுக்கு திரும்பிய மாணவி கஸ்தூரியை தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாணவி கஸ்தூரி கூறியதாவது: தன்னைப் போல் எந்த பின்புலம் இல்லாமல் பல ஏழை எளிய மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க நினைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்காததால், தங்கள் திறமைகளை தங்களுக்குள்ளேயே புதைத்து வருகின்றனர். அவர்களை, விளையாட்டுத் துறை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.